விரைவில் திரையரங்குகளுக்கு தளர்வு அளிக்கப்படும் – அமைச்சர் ராஜூ!
பல்வேறு தளர்வுகள் திரைத்துறைக்கு அளிக்கப்பட்டது போல திரையரங்குகளுக்கும் விரைவில் தளர்வு அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரின் நினைவு நாளை முன்னிட்டு பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி தலைமையில் தீப ஜோதி எடுத்துச்செல்லும் நிகழ்வில்அமைச்சர் கடம்பூர் ராஜூ தீப ஜோதி தொடர் ஒட்டத்தை தொடங்கி வைத்தார்.முன்னதாக காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருந்தலைவராக பார்க்கப்பட்டார் காமராஜர். கிங் மேக்கர் என்றால் காமராஜர் மட்டுமே என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திரையுலகின் ஒரு அம்சமே திரையரங்கம். டப்பிங், படப்பிடிப்பு என படிப்படியாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் கால அவகாசம் போதவில்லை என்பதால் 2016-18 வரையிலான படங்களுக்கு மார்ச் மாதத்திற்கு பதில் அக்டோபர் வரை விண்ணப்பிக்கலாம் என தளர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தார்.இந்நிலையில், பல்வேறு தளர்வுகள் திரைத்துறைக்கு அளிக்கப்பட்டது போல திரையரங்குகளுக்கும் விரைவில் தளர்வு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், கிராம சபை கூட்டங்களில் இத்தனைபேர் தான் வரலாம் என கட்டுப்பாடு விதிக்கமுடியாது. ஒத்திவைப்பில் அரசியல் இல்லை எனவும், கிராம சபை விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.