விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள் – விஜயபிரபாகரன் கோரிக்கை…
கட்சியில் உள்ள அனைவரும் என்னை மாமனாய், மச்சானாய், சகோதரனாய், நண்பனாய் பாருங்கள், விஜயகாந்த் மகனா என்னை பார்க்காதீங்க என தேமுதிக தொண்டர்களுக்கு விஜயபிரபாகரன் கோரிக்கை வைத்துள்ளார்.தேமுதிக 16ம் ஆண்டு தொடக்க விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக 100 இளைஞர்கள் கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசும்போது, தேமுதிக இன்னும் அதிக அளவில் வளரும். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.
இந்தி தெரியாது போடா என்று பலரும் தவறாக பேசி வருகிறார்கள். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது கேப்டனின் இலக்கு. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 100% வேலை வாய்ப்பை தந்திருந்தால் தமிழர்கள் வெளியே சென்றிருக்க மாட்டார்கள். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது கேப்டனின் முழக்கம். வாழ்வுக்கு எது தேவை என்பதை நாம் முடிவு செய்து கொள்வோம்.
ஆனால் யாரும் நமக்கு வழி காட்ட வேண்டாம். 2021ல் எங்க அப்பா தான் கிங் . பிறந்ததிலிருந்து அவர் எனக்கு கிங்காக தான் இருந்திருக்கிறார். கேப்டன் என்றால் கேப்டன் தான், அவர் தலைமை தாங்க வேண்டும். பொதுக்குழு செயற்குழு கூடி தேர்தல் நேரத்தில் உரிய முடிவை அறிவிப்போம். கொரோனா அச்சம் காரணமாக 200 பேர் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சியாக இது நடைபெறுகிறது. 100 பேர் வந்ததாக கருதவில்லை, 100 குடும்பங்கள் தேமுதிகவில் இணைந்ததாகவே கருதுகிறேன்.என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள், என்னை ஒரு தோழனாக குடும்பத்தில் ஒருவனாக மச்சானாக மாமனாக சகோதரனாக பாருங்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.