சென்னை: ‘வாசன் ஐ கேர்’ குழும தலைவர் அருண் நேற்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் அவரது மரணம் குறித்து வதந்தி பரப்பப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
‘வாசன் ஐ கேர்’ நிறுவனர் ஏ.எம்.அருண், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு கண் மருத்துவமனைகள், பல் மருத்துவமனைகளை தொடங்கினார். இந்தியா முழுவதும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் இவை செயல்படுகின்றன. 10 ஆண்டுகளில் வாசன் ஐ கேர் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீட்டில் இருந்த அருணுக்கு நேற்று காலை 8 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைபரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சமூகவலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. மேலும், பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி ட்விட்டர் பதிவில், ‘அருண் மரணம் குறித்து விசாரணை தேவை என குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்’ என வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை காவல்துறை கூறுகையில், சச்தேக மரணம் என்றோ, தற்கொலை என்றோ குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், நேற்றே உடற்கூராய்வு முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு முடிந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.