வழிபாட்டு தலங்கள் திறப்பு – கட்டுப்பாடுகள் என்னென்ன?
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கோயில், தேவாலயம், மசூதி ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கோயில்களின் நுழைவுவாயிலில் கிருமி நாசினி வைப்பதுடன், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுடன்,
உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு இருமல், சளி போன்ற நோய் அறிகுறி இருந்தால் உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரிய கோயில்களில் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கி குறிப்பிட்ட நபர்களை மட்டுமே, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.