வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்வு…
வழக்கமாக புரட்டாசி மாதத்தில் முட்டையின் தேவை குறைவாக இருக்கும் என்ற போதிலும், இம்முறை மக்களிடையே முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தடுப்புக்கான உணவில், முட்டை முக்கியப் பங்கு வகிப்பதாலும், ஆந்திரா மாநிலத்தில் சத்துணவில் முட்டை வழங்குவதாலும், அதன் தேவை பிற மாநிலங்களிலும் தொடர்ந்து உயர்ந்துள்ளது.இதனால் அண்மையில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் விலை 5.25 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதற்கு முன் முட்டையின் அதிகபட்ச விலை 5.5 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டு, 5.25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச விலை உயர்வாக கருதப்படுகிறது. இதனால் ஒரு முட்டையின் சில்லறை விலையும் ஆறு ரூபாய்க்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை ரூ.135-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.94-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.