வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் கொட்டும் மழை…
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையின்போதே, அதிக மழையைப் பெறுகின்றன. ஆனால் மலை மறை பிரதேசமான தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையால் மட்டுமே பரவலாக பயன் கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றின் திசை மாறுபாடு போன்ற வானிலை மாற்றங்களால் மழை இருக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பரவலாக நல்ல மழையை பெற்றுள்ளன.
ஜூன்-1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலம் . அதன்படி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, இன்று வரை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய மழை 341.9 மில்லி மீட்டர் என்றாலும், தற்போது கிடைத்துள்ள மழையளவு 424.4மில்லி மீட்டராக உள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பின், நடப்பாண்டில்தான் தென்மேற்கு பருவமழை, இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நடப்பாண்டில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பரவலாக கன மழை பெய்தது. அதேபோல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்து நிலச்சரிவு மற்றும் ஒரு சில ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, திருப்பூர், தேனி மாவட்டங்களில், இயல்பை விட, இருமடங்கு அதிக மழை பெய்தது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை பொறுத்தவரை, செப்டம்பரில் மழையின் தீவிரம் இருந்தாலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே பெய்துள்ளது. புதுவையில் 25 சதவீதம் குறைவாகவும், காரைக்காலில் 48 சதவீதம் அதிகமாகவும் இந்த காலகட்டத்தில் மழை பெய்துள்ளது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.