மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத் குற்றங்களைக் கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து வருட சிறைதண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இதுபோன்ற குற்றங்களை ஜாமீன் பெற முடியாத குற்றங்களாக மாற்றுவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இந்த மசோதா அடுத்த சட்டமன்ற அமர்வில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
“மத்திய பிரதேச மத சுதந்திர மசோதா, 2020’ஐ சட்டசபையில் அறிமுகப்படுத்த ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். இது ஐந்து ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை வழங்க வகை செய்கிறது. மேலும் இதுபோன்ற குற்றங்களை ஜாமீன் பெறாத குற்றமாக அறிவிக்க நாங்கள் முன்மொழிகிறோம்” என்று மிஸ்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
திருமணங்கள் மூலம் வலுக்கட்டாயமாக மத மாற்றத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த இந்த சட்டத்திருத்தம் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருப்போரும் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள் என்று மிஸ்ரா கூறினார்.
மதம் மாற்றப்பட்ட ஒரு நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகள் நடவடிக்கைக்காக கட்டாயமாக புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் மேலும் கூறினார். ஒரு நபரை மதம் மாற்றும் மதத் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அன்பின் பெயரில் எந்த ஜிகாத்தும் இருக்காது என்றும், அத்தகைய செயலை யார் செய்தாலும் களையெடுக்கப்படுவர் என்றும் கூறியிருந்தார். இதற்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சவுகான் அப்போது தெரிவித்திருந்தார்.
உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றுவதாகக் கூறியிருந்த நிலையில், மத்திய பிரதேசம் வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கிட தீவிர முனைப்பில் உள்ளது.