ரூ.100 கோடி மதிப்பு ஹெராயின் மற்றும் ரூ.1. 34 கோடி ரொக்கம் பறிமுதல் இதில் 3 பயங்கரவாதிகள் கைது..!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா போலீசார் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற மிகப்பெரிய போதை கும்பலை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஹெராயின், ரூ.1.34 கோடி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இது குறித்து ஹந்த்வாரா காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீப் சக்கரவர்த்தி கூறியதாவது: போதை கும்பலின் நடமாட்டம் பெரியளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எங்கள் தேடுதல் வேட்டையில், போதை பொருட்களை விற்பனை செய்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யும் கும்பலைச் சேர்ந்த மூவரை கைது செய்தோம். அவர்களில் முக்கிய குற்றவாளியான இப்திகார் இந்திராபி பிரபலமான போதை மருந்து கடத்தல்காரன். இரண்டாவது குற்றவாளி அவனது மருமகன் மொமின் பீர், மூன்றாவது நபர் இக்பால்-உல்-இஸ்லாம்.கைது செய்யப்பட்ட மூவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ உயர் தர ஹெராயின், ரூ.1.34 கோடி இந்திய ரொக்கம், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இந்த கும்பலுக்கு பயங்கரவாதிகளுடன் உள்ள தொடர்பு குறித்து ஆழமாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.