அடித்து காயப்படுத்த ரூ.10 ஆயிரம், கொலை செய்ய ரூ.55 ஆயிரம் மட்டுமே என தொலைபேசி எண்களுடன் விளம்பரம் செய்த கூலிப்படை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் முசாபர்நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் தங்களது கூலிப்படை பணத்திற்காக மக்களைத் தாக்க மற்றும் கொலை செய்வதற்கான விலைப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கூலிப்படை கும்பல் மக்களைத் துன்புறுத்துவது முதல் அவர்களைக் கொல்வது வரையிலான குற்றங்களைச் செய்ய வசூலிக்கப்படும் விலைபட்டியல் குறித்து ஏராளமான விளம்பர படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு உள்ளன.
கூலிப்படை கும்பல் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில், ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியை பிடித்து கொண்டு இருப்பதுபோல புகைப்படம் ஒன்றுடன் விலைப்பட்டியலை குறிப்பிட்டுள்ளது, அதில்,
யாரையாவது மிரட்ட வேண்டுமா – ரூ.1,000, அவர்களை அடிக்க வேண்டுமா – ரூ.5,000, தாக்கி காயப்படுத்த ரூ.10,000, கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், தொடர்பு கொள்ள டெலிபோன் எண்ணுடன் சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளது இந்த கூலிப்படை கும்பல்.
இந்த விலைப்பட்டியல் சமூக வலைதளத்தில் வைரலாகி, உத்தரபிரதேச போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து, விளம்பரத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.