“ரஜினியை வரவேற்பதில் தவறில்லை” – நயினார் நாகேந்திரன்…
ரஜினியை, அரசியலுக்கு வருமாறு தமிழக பாஜக தலைவர் அழைப்பு விடுப்பதில் எந்த தவறுமில்லை என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், ”பாஜக வேறு அதிமுக வேறு என்று சொல்ல முடியாது இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல ஒரே சித்தாந்தம் உடையது என்றும்,தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என்றால் அசைவம் சாப்பிட்டால் தான் தெம்பாக வேலை செய்ய முடியும் என்றும் அனைவரும் தெம்பாக சாப்பிடுங்கள்” என்றும் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜக அமமுக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். அதிமுகவில் நிலவும் இரட்டைத் தலைமை குறித்த கேள்விக்கு , எங்களோடு கூட்டணியில் உள்ள கட்சி ஒற்றை தலைமையோடு ஒற்றைக் கருத்தோடு இயங்கினால் தான் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுவார்கள்.
பாஜக தமிழ் மாநில தலைவர் ரஜினியை அரசியலில் வரவேற்பதில் எந்த தவறுமில்லை என்றும் ஆனால் ரஜினியை நிச்சயமாக முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்த மாட்டார்கள் என்றும் கூறினார்.