“மேட்டூர் அணை” ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு .!!!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை, 8 ஆண்டுகளுக்கு பிறகு திட்டமிட்டபடி ஜூன் 12ல் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்படும். 100.01 அடி தண்ணீரும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி., ஆக உள்ளதால் தண்ணீர் திறக்கப்படுகிறது. 50 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அணையில் நீர் உள்ளது. தண்ணீர் திறப்பால், இந்த ஆண்டு 3.25 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்படும்.
அப்படி செய்தால், 5.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூலுக்கு வாய்ப்பு உள்ளது.
குறுவை சாகுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். பாசன கால்வாய்களை விரைவாக தூர்வார நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குறுகிய கால நெல் விதைகளை இருப்பு வைத்து தேவையான அளவு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கிணற்று வசதியுள்ள விவசாயிகள் 12ம் தேதிக்குள் நடவு பணிகளை முடிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் . நெல் விதைகள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.