முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவர் – டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்!!!
ஜுன், ஜுலை மாதங்களில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறிய கருத்துகளால் உட்கட்சி பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது. அமைச்சர் உதயகுமார் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று கூறிய நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தலுக்கு பிறகு முதலமைச்சரை தேர்வு செய்யலாம் என தெரிவித்தார். இதனைதொடர்ந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி தான் முதலமைச்சர் வேட்பாளர் என பதிவிட்டிருந்தார்.
இதனைதொடர்ந்து செப்டம்பர் 28-இல் நடந்த அதிமுக செயற்குழுவை தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்தநிலையில், இன்று நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘எடப்பாடி பழனிசாமியின் தவறுகள் மக்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கிறது. மத்திய அரசிடம் மாநில உரிமைபெற முடியாத கையாலாகாதவர் எடப்பாடி பழனிசாமி. இவர் பெயரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் முதல்வர் பதவிக்கு இவர் தகுதியற்றவர் என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மக்கள் விரோத போக்கு, கையாலாகாத தன்மை கொண்டவர். அ.தி.மு.க ஜெயலலிதாவால் வெற்றி பெற்றது. அதை வைத்து இவர்கள் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின் சொந்த முயற்சியால் யாரும் வெற்றி பெறவில்லை. அ.தி.மு.கவின் இந்த முயற்சிகள் அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் போடும் போட்டிகள் அனைத்துக்கும் ஒரே காரணம் சசிகலா வெளியில் வர போகிறார் என்பது தான்’ என்று தெரிவித்தார்.