மியான்மரில் ராணுவ புரட்சி: ஆங் சான் சூகி கைது!
மியான்மர் நாட்டில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் முக்கிய தலைவரான ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர் நாட்டில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆங் சாங் சூகியின் கட்சி பெரும்பான்மை பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சாங் சூகி உள்பட முக்கிய தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு ஆண்டிற்கு அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சிதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆங் சாங் சூகி சுதந்திர போராட்டத்தை நடத்தி பல ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பதும் அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது என்பதும் அந்த தேர்தலில் ஆங் சாங் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவர் வெளிநாட்டு உரிமை பெற்று இருந்ததால் அவரால் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. இதனால் அவர் முக்கிய பொறுப்பில் மட்டும் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவம் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியதால் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது.