மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மார்கெட் மூடப்பட்டது.!
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள பழ மார்க்கெட்டில் சுமார் 242 கடைகள் உள்ளது, இங்கு உள்ள கடைகளுக்கு காஷ்மீர்,ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து சமூக இடைவெளியை பின்பற்றப்படவேண்டும் என்பதற்காக பழ மார்க்கெட்டினை ஒருபகுதியாக பிரித்து அருகே இருக்கக்கூடிய பள்ளி வளாகத்தில் மைதானத்தில் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது.மார்க்கெட்டில் கடை நடத்திவரும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னை உள்ள மகள் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் அதன் மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டை மூட மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். மேலும் மார்க்கெட் வளாகம் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து கடை உரிமையாளர்கள் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.