மக்கள் திலகம் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் – எளிய மக்களை பிரதிபலித்தவர் – கொண்டாடும் தமிழகம்!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் மக்கள் திலகமுமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் தமிழகத்தில் இன்று (ஜனவரி 17) உற்சாகமாக கொண்டாடப் படுகிறது.
மூன்றெழுத்து என்றாலே எம்.ஜி.ஆர் தான். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பு, உற்சாகம், நடனம், நாடகம், சண்டை பயிற்சி, கொள்கை, ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான அன்பு, தாய் பக்தி, தாய்நாடு பக்தி என மக்கள் போற்றும் மனிதராக வாழ்ந்து வந்துள்ளதாக எப்போதும் எளிய மக்கள் கூறி வருவது உண்டு.
எம்.ஜி.ஆருக்கு கிடைத்த கதாபாத்திரம் அனைத்தும் எளிய மக்களை நேரடியாக சென்று எம்ஜிஆரை அவர்களின் வீடுகளுக்குள் கொண்டு சென்று சேர்த்தது. எம்.ஜி.ஆர். தனது ஒரு திரைப்பட பாடலில் “புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா ஏழை நமக்காம” என்கிற வரிகள் வரும். இப்பாடலில் அனைத்து மதத்தினரையும், மதத்தை தவிர்த்து காந்திய வழியில் நடப்பவரையும், இவற்றையெல்லாம் தவிர்த்து கம்யூனிச பாதையை தேர்ந்தெடுத்தவரும் என சகலத்தாரும் எம்ஜிஆரை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அத்தனை வார்த்தைகளும் இருக்கின்றன.
தொழிலாளர்கள், மீனவர், ரிக்க்ஷாகாரர், விவசாயி, நரிக்குறவர்கள் என அத்தனை மக்களின் உணர்வுகளையும் சினிமாவில் அந்தந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை திரையில் பிரதிபலித்தவர் எம்ஜிஆர். ‘ஒரு மனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை!’ என்று, தான் பாடிய பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர், ஒவ்வொரு திரைப்படப் பாடல்களிலும், தான் ‘அண்ணா வழி வந்தவர்’ என்பதை சொல்லி நன்றியை காட்டிக் கொண்டே இருந்தார்.
நினைத்ததை முடிப்பவன் படத்தில் வரும் ‘பூமழை தூவி’ பாடலில், தங்கையை பார்த்து அண்ணன் பாடும் பாடல் வரிகளில் கூட, ‘என் அண்ணாவை ஓர்நாளும் என்னுள்ளம் மறவாது’ என தங்கையின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் பாடுவது போல், அறிஞர் அண்ணாவின் மீதான தம் மாண்பினை வெளிப்படுத்துவார். கட்சி, அரசியல், கொள்கை என திரையை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு இருந்தபோதும், முதல்வரானபோதும் எந்த கட்சி தொண்டர்களும் எந்த கட்சி தலைவர்களும் எம்.ஜி.ஆர் மீது மரியாதை கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.
அதற்கு ஒரே காரணம் மாண்பிலும் பண்பிலும் மகத்தானவர் அந்த மாமனிதர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் என்பதுதான்!