போன் வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. 15 வயதான இவரது மகன் தினேஷ்குமார் மிட்டூர் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு 10 வகுப்புக்கு சென்றார். ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்று இலவச பாடபுத்தகத்தை வாங்கி வந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், தாயின் சேலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிறுவன் தற்கொலைக்கான காரணம் குறித்து, பெற்றோர், கிராம மக்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால் நண்பர்களுடன் தினேஷ்குமார் விளையாடி வந்துள்ளார். நண்பர்கள் அனைவரும் கையில் செல்போனுடன் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர். இதனால், தனக்கும் ஸ்மார்ட்போன் வேண்டும் என பெற்றோரிடம் தினேஷ்குமார் கேட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய தினேஷ்குமாரின் தந்தை திருமூர்த்தியால் மகனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தர முடியவில்லை. செவ்வாய்க்கிழமை பள்ளியில் புத்தகத்தை வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, சக மாணவர்கள் கையில் ஸ்மார்ட் போனுடன் பப்ஜி கேம் விளையடியுள்ளனர்.அவர்கள் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினேஷ்குமார், தனக்கும் பப்ஜி கேம் விளையாட வேண்டும் என ஆசையாக உள்ளதாகக்கூறி, நண்பர்களிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் மொபைல் போன் தரவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ்குமார் நேராக வீட்டுக்குச் சென்று தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதேசமயம், சிறுவனின் மரணத்திற்கு பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கித்தராததுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.ஆசை வார்த்தை சொல்லி பதின்பருவத்தினரை ஏமாற்றுவது இது போன்ற திடீர் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.