பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்கள்…!
கந்த சஷ்டி கவசத்தில் வரும் வரிகள் குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் மற்றும் அதன் தொகுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக குரல் எழுப்பிவந்தனர். நேற்று, தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், கருப்பர் கூட்டத்தை சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் நேற்று காவல்துறையில் சரணடைந்தார். இந்தநிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுத்திலுள்ள பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி துக்ளக் வார இதழ் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் சிலை நிர்வாணமாகக் கொண்டுவரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது என்று பேசியிருந்தார். அந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரியார் சிலையின் தலை மற்றும் கை பகுதி உடைக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதற்கு முன்னதாக, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்தது. அது தமிழகம் முழுவதும் பரபரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.