“பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்” – அமைச்சர் உதயகுமார்.
பல்வேறு தடைகளைத் தாண்டி பாரத் நெட் திட்டம் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படும் என பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயகுமார். மதுரையில் அமைச்சர் உதயகுமார் அளித்த பிரத்தியேக பேட்டியில், ”எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நான்குவழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஜப்பான் கூட்டுறவு முகமையின் ஜமைக்கா மூலம் நிதி வழங்குவதற்கான ஒப்பந்த பணிகள் நடந்து இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக கேட்கப்பட்ட 25 ஏக்கர் நிலமும் தமிழக அரசுகொடுத்துள்ளது. விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என தகவல் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது.
பாரத் நெட் மறு ஒப்பந்தம் தொடர்பான பலதுறை சார்ந்த இயக்குனர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் 12542 கிராமங்களுக்கும் ஆப்டிகல் பைபர் இணைய சேவை வழங்கப்படும்.மத்திய அரசு வழிகாட்டிய சுயசார்பு இந்தியா கொள்கை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த மறு டெண்டருக்கான பணிகள் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஏஜென்சியை வைத்துக் கொண்டு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி தான் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. தேர்தலுக்கு முன் மிகப்பெரிய சாதனை திட்டமாக பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.