பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையிலும் படையெடுத்துள்ள “வெட்டுக்கிளிகள்”!
பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையிலும் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல் மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. அங்கு பயிரிடப்பட்டுள்ள சோளம், வாழை, கொய்யா, மா உள்ளிட்ட பயிர்களை, வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக சேர்ந்து அழித்து வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு அதிகளவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை தீர்த்துக்கட்டும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்தியாவின் உதவியை இலங்கை அரசு கோரவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான கிருமிநாசினியை உடனடியாக கண்டுபிடிக்குமாறு விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு, இலங்கையின் விவசாய திணைக்கள பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.