கோவை : ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கோவையில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 48). திருமணமான இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். இவரது மனைவி உமா நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழலில், தனபால் அவினாசி அலை அண்ணா சிலை அருகே உள்ள ‘பார்ச்சூன்’ என்ற ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. முழு நேரமும் அதிலேயே கவனத்தை செலுத்திய நிலையில், முதலீடு செய்த பணத்தை இழந்துள்ளார்.
மிகுந்த மனஉளைச்சலில் இருந்த தனபால் இன்று காலை அவினாசி சாலையில் உள்ள பார்ச்சூன் நிறுவனத்திற்கு முன்பு நின்று, பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியதில் வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயலுவதற்குள் அவர் உடல் கருகி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.