பிகில் திரைப்படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டி தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லைகளை மேலும் பெரிதுபடுத்தி உள்ள விஜய் அறிமுகமான 28 ஆண்டுகளில் இதுவரை 64 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தளபதி, வசூலில் பட்டையை கிளப்பும் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி, தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் திரைப்படங்களில் மூன்று இடங்களையும் முதலிடத்தையும் தன்வசப்படுத்தியுள்ள கதாநாயகன் என பல்வேறு சிறப்புகளுடன் உலாவரும் நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் சரியாக 28 ஆண்டுகள் ஆகின்றன.
நடிகர் விஜய்க்கு இந்த அடையாளங்களும் அங்கீகாரங்களும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை. விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய்க்கு முதல் திரைப்படத்தில் எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை இந்த முகத்தை பணம் கொடுத்து பார்க்க வேண்டுமா என பத்திரிகைகள் விஜய்யை கிண்டலடித்தன. முதல் வெற்றிக்காக பல ஆண்டுகள் போராடிய விஜய் நான்கு ஆண்டுகள் கழித்து பல்வேறு தோல்விகளுக்கு பிறகு பூவே உனக்காக திரைப்படத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தார்.
திருமலை திரைப்படத்தின் மூலம் அதிரடி அவதாரம் எடுத்த விஜய் கில்லி திரைப்படத்தில் தமிழகத்தில் அதிக திரையரங்க வசூல் ஈட்டிய நாயகன் என்ற புதிய சாதனையை படைத்து தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக உருவெடுத்தார். தொடர்ந்து துப்பாக்கி கத்தி ஆகிய திரைப்படங்களில் சமூகக் கருத்துக்களையும் பேசத் தொடங்கிய விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக உயர்ந்தார். மெர்சல் திரைப்படத்தின் மூலம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி நடிகர் ரஜினிகாந்திற்கு நிகராக தமிழ் சினிமாவின் வசூல் சாதனை புரியும் நடிகர் என்ற புதிய அந்தஸ்தை அடைந்த விஜய் தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகராகவும் உயர்ந்தார்.
பிகில் திரைப்படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டி தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லைகளை மேலும் பெரிதுபடுத்தி உள்ள விஜய் அறிமுகமான 28 ஆண்டுகளில் இதுவரை 64 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் 64-வது திரைப்படமாக எதிர் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. மேலும் நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் அசத்தி வரும் விஜய் இன்னும் பல உச்சங்களை தொட்டு ரசிகர்களை மகிழ்விப்பார் என்பதில் சந்தேகமில்லை.