பஞ்சாப் மாநிலத்தில் அடையாளமாக பிரபல நடிகர் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக போக்குவரத்து உதவியை செய்து கொடுத்து, நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்றவர் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். அவரது இந்த மனிதநேயமிக்க செயலை அனைத்து தரப்பு மக்கள் பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து, ஏழை மாணவர்களின் கல்வி மற்றும் விவசாயிகள் என பல்வேறு தரப்பினருக்கு அடுத்தடுத்து உதவிகளை செய்து கொடுத்தார்.
இப்படி, பல்வேறு உதவிகளை செய்து மக்களின் மனதில் இடம்பிடித்த சோனு சூட், பஞ்சாப் மாநிலத்தின் மொகா மாவட்டத்தில் பிறந்தவர். எனவே, இவரை பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என்று பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையமும், சோனு சூட்டை ‘பஞ்சாப் ஐகான்’ ஆக அறிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.