தோனியின் புதிய வியூகங்கள் கைகொடுக்குமா?
ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கட்டாயம் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் சென்னை அணி ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. சென்னை அணியின் தொடக்க வீரர்களான வாட்சன் – டூபிளஸி சிறப்பான பார்மில் உள்ளனர். ஒன்டவுனில் களமிறங்கும் அம்பத்தி ராயுடுவும் ஓரளவிற்கு ரன் சேர்க்கிறார். இதற்கு பிறகுதான் சென்னை அணிக்கு பிரச்னையே தொடங்குகிறது. மிடில் ஆர்டரில் வீரர்கள் ரன்குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக கேப்டன் தோனி கிரீசிக்கு வந்தாலே எதிரணியின் லெக் ஸ்பின்னர் மறுமுனைக்கு வந்துவிடுகிறார். அந்த அளவிற்கு தோனியின் பலவீனத்தை அனைத்து அணிகளும் அறிந்து வைத்துள்ளன.
சென்னை அணியின் பந்து வீச்சிலும் இதே நிலைதான். தோனியின் ஃபீல்டிங் வியூகம், அடுத்து யார் பந்துவீச வருவார் என அனைத்தையும் எதிரணியினர் சுலபமாக கணித்து விடுகின்றனர். கொல்கத்தா உடன் சென்னை ஆடிய போட்டியில் இதனை கண்கூடாக பார்க்க முடிந்தது. அணியின் தோல்வி குறித்து தோனியே மனம் திறந்து பேசியிருந்தார். சிஎஸ்கே கப்பலில் விழுந்த ஓட்டையை சரிசெய்து இன்றைய போட்டியில் யாரும் கணிக்க முடியாத புது திட்டத்துடன் சென்னை அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் சேசிங் தான் செய்துள்ளது. இனிவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அது அணி வீரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கலாம்.ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டது. இந்த போட்டியில் இருந்து ஹைதராபாத் நிச்சயம் பாடம் கற்றிருக்கும்.
இதனால் சென்னைக்கு எதிரான போட்டியில் முழு உத்வேகத்துடன் அந்த அணி களம் இறங்கும். ரஷித் கான், நடராஜன் என இரண்டு சிறப்பான பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்துள்ளனர். இரு அணிகளும் இதுவரை 13 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 9 ஆட்டங்களிலும் ஹைதராபாத் 4 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.