குப்பையில் போடப்படும் வாகன டயர்களை மீண்டும் புதுப்பித்து அதிலிருந்து காலணிகள் செய்யும் பணியில் அசத்தி வருகிறார் இளம் தொழில்முனைவோர் பூஜா படாமிகார். பேப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட வீணாகும் பொருட்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. அந்த வகையில் இரு சக்கர வாகனங்கள் முதல் 4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு கிழிந்து போன டயர்கள் ஏராளமானவை வீணாகிறது. ஆண்டுக்கு 1 பில்லியன் டயர்கள் வீணாகின்றன. இந்த டயர்களை கொண்டு என்ன செய்யலாம் என்ற யோசனையில் புணே தொழில்முனைவோர் பூஜா படாமிகார் இருந்தார். பின்னர் அவர் அந்த டயர்களை மேற்சுழற்சி செய்து அதாவது மேலும் பயனுள்ளதாக்கும் வகையில் சுழற்சி செய்து அதன் மூலம் காலணிகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இரு ஆண்டுகள்
பூஜா படாமிகார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முதுகலை பட்டம் படித்துள்ளார். இவர் கடந்த இரு ஆண்டுகளாக குப்பையில் தூக்கிப் போடப்படும் டயர்களை கொண்டு காலணிகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது பிராண்டின் பெயர் நிமிடால்.
காலணி
இந்த வீணாகும் டயர்களை மறுசுழற்சி மூலம் காலணிகளாக மாற்றுவதால் மாசு தடுக்கப்படுகிறது. இதுகுறித்து பூஜா கூறுகையில் உலகம் முழுவதும் 1 பில்லியன் டயர்கள் கிடைக்கின்றன. இந்த வீணாகும் டயர்களை கொண்டு என்ன செய்யலாம், அதிலும் நாம் செய்யும் பொருள் தினந்தோறும் பயன்படுத்தும்படியாக இருக்க வேண்டும் என கருதினேன்.
காலணி செய்தல்
அதில் கிடைத்த முடிவுதான் காலணி செய்வதாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த காலணி செய்யும் நிறுவனத்தை தொடங்குவதற்காக ஐடி நிறுவனத்தின் பணியை தூக்கி எறிந்தேன். அதே ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா போட்டியில் வளரும் பெண் தொழில் முனைவோருக்கான விருது எனக்கு கிடைத்தது.
பிளாஸ்டிக்
பொதுவாக நாம் பயன்படுத்தும் காலணியில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவோம். ஆனால் நாங்கள் செய்யும் காலணிகளில் மேற்சுழற்சி செய்யப்பட்ட டயர்களை பயன்படுத்துகிறோம். இதனால் நாங்கள் 3 நன்மைகளை செய்கிறோம். ஒன்று சந்தைக்கு வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கிறோம். இரண்டாவது உரக் குழியை குறைக்க உதவுகிறோம். மூன்றாவது பிளாஸ்டிக் அல்லது ரப்பர் மூலம் காலணி செய்ய தேவைப்படும் எண்ணெய் அல்லது தண்ணீரின் தேவையை குறைக்கிறோம் என்றார்.