திருவள்ளூரில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தினார் மு.க ஸ்டாலின்!
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில்கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார். கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதுமுள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். முன்னதாக தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி அக்டோபர் 2-ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது. கூட்டத்தை பொது வெளியிலோ அல்லது காற்றோட்டமான இடத்திலோ நடத்தலாம். கூட்டத்துக்கு முன்பாக முழுமையாக அது நடைபெறும் இடத்தை தூய்மை செய்து, கிருமிநாசினி பொருள்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சில மாவட்ட ஆட்சியர்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு தடைவிதித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் நாளை நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் நாளை நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார்.
அதேபோல, திருப்பூரில் கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலும் நாளை நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. கோவையிலும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 860 ஊராட்சிகளிலும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, “வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டு நிற்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு; திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.