கதைகள்தமிழ்நாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.

இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முழுவதும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இன்று முதல் மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கார்த்திகை மாதத்துக்கான பவுர்ணமி நாளை மதியம் 1.17 மணிக்கு தொடங்கி மறுநாள் (30-ந் தேதி) மதியம் 2.23 மணிக்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 30-ந் தேதி (நாளை மறுநாள்) சந்திரசேகரர் தெப்பல் உற்சவம், 1-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், 2-ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சிகள் அய்யங்குளத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.