சென்னை: கடந்த 4ம் தேதி இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் கணேசன், போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே ரத்னா சித்த மருத்துவமனை நடத்தும் திருத்தணிகாசலம் மீது போலியாக கொரோனாவுக்கு மருந்து தயாரித்துள்ளதாக புகார் அளித்தார். அந்த புகாரின் மீது போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி திருத்தணிகாசலத்தை கடந்த 6ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், கோயம்பேட்டில் அவர் நடத்தி வந்த மருத்துவமனையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கொரோனா நோய்க்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறப்படும் மருந்துகளை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வுக்காக அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கைக்கு பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.