தமிழ்தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை..

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலை முன்பு எழுந்தருளினார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலையில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

மதியம் சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய புறப்படுகிறார்.

வழக்கமாக கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவில் கிரிப்பிரகார கடற்கரை நுழைவுவாயில் அருகில் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

7-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கிய விழா நாட்களான 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்புகள் மற்றும் தகரத்தால் அடைக்கும் பணி நடந்தது. சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை சீரமைக்கும் பணி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.