திமுகவிற்கு ஒதுக்காவிட்டால் தீக்குளிப்போம்… நிர்வாகி மிரட்டல்
சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதி திமுகவிற்கு ஓதுக்கவிட்டால் தீ குளிப்போம் என திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மண்டல வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். கடந்த 23-ஆம் தேதி தெற்கு மண்டல நிர்வாகிகளை மாவட்டம், தொகுதி வாரியாக சந்தித்து மு.க ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதி கூட்டணிக்கு விட்டு கொடுக்கமால், திமுக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 1991 தேர்தலுக்கு பிறகு , திமுக இந்த தொகுதியில் போட்டியிடவில்லை. 1996 தமாக, 2001 பாஜக, 2006,2011,2016 ஆகிய மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி என திமுக கூட்டணியில் இந்த தொகுதிகளில் போட்டியிட்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் சொந்த தொகுதி என்பதால் ஓவ்வொரு தேர்தலிலும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை கூட்டணியில் பெற்றுவிடுகிறார்.வரும் சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதி திமுகவிற்கு ஒதுக்காவிட்டால், தீ குளிப்பேன் என ஒரு நகர செயலாளர் ஆவேசமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது நல்ல முடிவு எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அவரை சமாதானபடுத்தி பின்னர் அனுப்பி உள்ளார்.
தற்போது காரைக்குடி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி உள்ளார். அவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் உள்ளார். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட கே.ஆர் ராமசாமி வாய்ப்பு கேட்டால் அவருக்கு தான் தொகுதியை திமுக தலைவர் வழங்குவார் என காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.