திடக்கழிவு மேலாண்மை திட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்…
பெருநகர சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டும், மண்டலங்களில் உள்ள தெருக்களை பெருக்குதல், வீடுகள்தோறும் தரம்பிரித்து சேகரிக்கப்படும் கழிவுகளை, அதற்குரிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையிலும், ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த உர்பசேர் சுமீத் நிறுவனத்திற்கு 8 ஆண்டு காலத்திற்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களுக்குட்பட்ட 92 வார்டுகளில் உள்ள 16,621 தெருக்களில் வசிக்கும் சுமார் 37 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அந்த நிறுவனத்திற்கு 24.12.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டது. 7 மண்டலங்களில் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து வீடுகளிலிருந்தும் 100 சதவீதம் தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் முறைப்படி பெறப்படும். இதற்காக, பழைய மூன்று சக்கர மிதிவண்டிக்குப் பதிலாக, மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள்தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளை பதனிடுதல், வளாகத்திற்கு கொண்டு சேர்த்தல், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை 6 மணி நேரத்திற்குள் சரிசெய்தல் போன்ற 34 எண்ணிக்கையிலான செயல்திறன் குறியீடுகள் வாயிலாக பணிகளை கண்காணித்து, அதன் மதிப்பீட்டு அடிப்படையில் ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இப்பணிகளை மேற்பார்வையிட பிரத்யேகமாக மூன்றாம் நிலை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் கண்காணிக்கப்படும். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் நேரடியாக பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடு நிலையங்களான இயற்கை உரம் தயாரிக்கும் மையம், பொருட்கள் மீட்பு வசதி மையம், எரியூட்டும் நிலையம், உயிரி அழுத்த இயற்கை வாயு நிலையம், தோட்டக் கழிவு மற்றும் தேங்காய் மட்டை பதனிடும் மையம், வளமீட்பு மையம், உயிரி மீத்தேன் வாயு நிலையம் ஆகிய மையங்களில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உர்பசேர் சுமீத் நிறுவனத்தின் மூலம் 125 காம்பாக்டர்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 3,000 இ-ரிக்ஷாக்கள், 11,000 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகள் போன்ற உபகரணங்களுடன், 10,844 எண்ணிக்கையிலான அனைத்து வகை பணியாளர்களும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.