தவறான வீடியோ தகவல்களுக்கு தடை : YouTube அறிவிப்பு..!
தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களைப் பற்றிய தவறான கோட்பாடுகளுக்கு எதிரான அதன் தற்போதைய விதிகளை யூடியூப் மேலும் கடுமையாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை குறித்து, உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அல்லது உலக சுகாதார அமைப்பின் ஒருமித்த கருத்துக்கு முரணான எந்தவொரு உள்ளடக்கத்தையும் தடை செய்வதாக இந்த வீடியோ தளம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யூடியூப் அதன் வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தடுப்பூசி மக்களைக் கொல்லும் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும், தடுப்பூசி பெறும் நபர்களில் மைக்ரோசிப்கள் பொருத்தப்படும் என்ற கூற்றுக்களை கொண்ட உள்ளடக்கத்தை நீக்குவதும் இதில் அடங்கும்” என்று கூறியுள்ளது.மேலும், யூடியூப் செய்தித் தொடர்பாளர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசியின் “பரவலான கவலைகள்” பற்றிய பொதுவான விவாதங்களை கொண்ட வீடியோக்கள் யூடியூப் தளத்தில் இருக்கும் என்று கூறினார்.
மருந்து தயாரிப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள போதிலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த, 38 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ள மற்றும் உலகப் பொருளாதாரத்தை முடக்கிய இந்த கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான நீண்டகால போராட்டத்தின் மையமாக தடுப்பூசிகள் பார்க்கப்படுகின்றன. ஆனால், யூடியூபில் தடுப்பூசிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்கள் மற்றும் பல தளங்களில் பகிரப்பட்ட வைரல் வீடியோக்கள் உட்பட, புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பற்றி சதி கோட்பாடுகள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுவது இந்த தொற்றுநோய் காலத்தில் அதிகரித்துள்ளன.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பற்றி ஆபத்தான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல் தொடர்பாக சுமார் 200,000 க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கியதாக யூடியூப் தனது அதிகாரப்பூர்வ வலைத்தள இடுகையில் தெரிவித்துள்ளது. மேலும், தளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதை கட்டுப்படுத்துவதாகவும், கொரோனா தடுப்பூசிகள் பற்றிய வீடியோக்களுக்கு சில எல்லைக்கோடுகளை விதித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அத்தகைய எல்லைக்கோடு உள்ளடக்கத்தின் எடுத்துக்காட்டுகளை வழங்க செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார். மேலும், தளத்தில் COVID-19 தடுப்பூசிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வலியுறுத்துவதற்காக வரும் வாரங்களில் கூடுதல் நடவடிக்கைகளை அறிவிக்கப்போவதாக யூடியூப் தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.