தமிழில் பேசி ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்த அஸ்வின்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா, புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலக்கை கிட்டத்தட்ட நெருங்கியது என்று கூறலாம்
ஆனால் 150 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இந்திய அணி ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டதால் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. மீதி உள்ள 5 விக்கெட்டுகளை மிக எளிதாக ஆஸ்திரேலியா வீழ்த்தி விடும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் விஹாரி மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் களமிறங்கினர். கிட்டத்தட்ட இருவரின் விளையாட்டும் கவாஸ்கர் மற்றும் ராகுல் திராவிட் ஆட்டத்தை நினைவு படுத்தியது போல் நங்கூரமாக நின்றனர். பவுலர்கள் மாறி மாறி பந்துவீசியும், ஸ்லெட்ஜ் செய்தும் கிண்டல் செய்தும் அந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
விஹாரி 161 பந்துகளை சந்தித்து 23 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் மட்டுமே எடுத்து இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போட்டியை டிரா செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் விஹாரி விளையாடிக் கொண்டிருந்தபோது அஸ்வின் விஹாரிக்கு தமிழில் பேசி சில திட்டங்களை வகுத்துக் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆஸ்திரேலிய அணியினர் ஒருபக்கம் ஸ்லெட்ஜ் செய்து கொண்டிருந்தாலும் அஸ்வின் தமிழில் என்ன பேசுகிறார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் விஹாரி தெலுங்கு மொழியை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்பதால் அஸ்வின் தமிழில் சொன்ன ஒவ்வொன்றையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி விளையாடினார். ஒவ்வொரு பந்தும் எப்படி வரும் என முன்பே கணித்து அஸ்வின் மிகச்சரியாக தமிழில் திட்டங்கள் வகுத்து கொடுக்க அவற்றை விஹாரி புரிந்துகொண்டு மிகச்சரியாக விளையாடினார். இதனால் தான் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை என்பதும் ஆஸ்திரேலியாவின் வெற்றி கனவு கலைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Niruban Chakkaravarthi M (@Niruban_be) January 11, 2021
இந்த போட்டியை இந்திய அணி டிரா செய்ய அஸ்வின் தமிழில் திட்டமிட்டதும் ஒரு முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.