தமிழக அரசுக்கு அச்சம்.. கிராமசபை கூட்டங்கள் ரத்து – மு.க ஸ்டாலின்!
“வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்டு நிற்கிறார்கள் ஊராட்சித் தலைவர்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு; திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கையில் கூறியிருக்கிறார்
“கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக 2.10.2020 அன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கதிரவன் இ.ஆ.ப. அவர்களை முதலில் அறிவிப்பு வெளிட வைத்து – பிறகு, “அரசு கொடுத்துள்ள கூட்டப் பொருள் தவிர, வேறு தீர்மானங்களை ஊராட்சித் தலைவர்கள் நிறைவேற்றக் கூடாது” என்று திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநரை விட்டு உத்தரவு அனுப்ப வைத்து – கபட நாடகத்திற்கான ஒத்திகை பார்த்து- ஊராட்சி மன்றத் தலைவர்கள் யாரும் அஞ்சவில்லை என்பதால்; கடைசி முயற்சியாக, முதலமைச்சரே தலையிட்டு, இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நாளையதினம் நடைபெற விருந்த கிராமசபைக் கூட்டங்களை அடிப்படையின்றி ரத்து செய்திருப்பதற்கு, அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கொரோனா பாதிப்பே இல்லை”, “நோயைக் கட்டுப்படுத்தி விட்டோம்”, “என்னுடைய மாவட்ட ஆய்வுகளால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது” என்றெல்லாம் தனக்குத்தானே தற்புகழ்ச்சியான வெற்றுப் பாராட்டுரையை ஒருபுறம் முதலமைச்சர் திரு. பழனிசாமி இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருக்க; இன்னொரு பக்கம் மாவட்ட ஆட்சித் தலைவரே “ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல்” என்ற காரணத்தைக் காட்டி, உள்ளாட்சி ஜனநாயகத்தின் ஆணிவேராகக் கருதப்படும் கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ய வைத்து – வெட்கக்கேடான இரட்டை வேடத்தைப் போட்டது அ.தி.மு.க. அரசு. ஏதோ ‘துக்ளக்’ தர்பார் போல் இன்று காலை முதல், இந்த “கிராம சபை” கூட்ட விவகாரம் அரசு நிலையில் காட்சியளித்தது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்- அதிலும் குறிப்பாக முதலமைச்சர் திரு. பழனிசாமியின் இந்த நான்காண்டு காலத்தில் – மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலரும்- ஏன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும் அ.தி.முக.வின் “மாவட்டச் செயலாளர்கள்” போல் செயல்படுகிறார்கள்.
ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக – திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த பணியை, நிச்சயம் செய்து முடிக்கும். ஆகவே ஏற்கனவே திட்டமிட்டபடி – கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் – கழக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும், கிராம மக்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் அ.தி.மு.க. அரசின் அருவருக்கத் தக்க முகத்தை – வேளாண் சட்டங்களை ஆதரித்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி – விவசாயிகளை அடிமையாக்கியுள்ள “ வஞ்சக நாடகத்தை”, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் சிறப்பான கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரையும் மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.