தமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதமாகிறதா?
தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்பு அரசு ஆய்வகங்களில் 48 மணி நேரத்திலும், தனியார் ஆய்வகங்களில் அதற்கு உள்ளாகவும் பரிசோதனை முடிவுகள் கிடைத்துவந்தன. தற்போது ஒரு வாரத்திற்கு மேலாகியும் கூட முடிவுகள் வருவதில்லை என பொதுமக்களும், மருத்துவர்களும் புகார் கூறுகின்றனர்.
2 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக ஒரு ஆய்வகத்திற்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்துவருகிறது. மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவு ஆய்வக திறனும், தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படாததால் முடிவுகளில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் சேர்ந்து வேலூர் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் மட்டுமே கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ராணிப்பேட்டை மட்டுமின்றி சில சமயம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் மாதிரிகள் வரும் எனக் கூறும் வேலூரைச் சேர்ந்த மருத்துவர்கள், மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் முடிவுகள் தெரியவர ஒரு வாரம் ஆவதாகவும், அதற்கு முன் சிலர் இறந்துவிடுகிறார்கள் அல்லது குணமாகிவிடுகிறார்கள் என கூறப்படுகிறது.
திருச்சியில் முடிவுகள் தாமதமானதால் கடந்த வாரம் ஆயிரத்து 600 மாதிரிகள் தனியார் ஆய்வகத்தில் கொடுக்கப்பட்டன. ஒரு நாளில் 300 முதல் 400 தொற்று கண்டறியப்படும் விருதுநகரில் ஒரு ஆய்வகம் மட்டுமே உள்ளது. இதனால் அருகிலுள்ள மாவட்டம் அல்லது சென்னைக்கு மாதிரிகளை அனுப்புவதால் முடிவுகள் தாமதமாகின்றன. மாதிரிகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்துக்கொண்டே செல்லாமல், ஆய்வகங்களில் கருவிகளின் எண்ணிக்கை மற்றும் மனிதவளத்தையும் அதிகரிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.