தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை உருவாகி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிஷா பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிஷா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19 – ஆகஸ்ட் 23 இடையே தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 20.08.2020 இரவு 23.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும். இதன் காரணமாகவும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.