தமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை!
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆரவாரம் இப்போதே களைக்கட்டி விட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக நேற்று மதியம் டெல்லி சென்றார். அங்கு நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சு வார்த்தையின்போது அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமரை முதல்வர் சந்திப்பார் எனத் தகவல் கூறப்பட்டது. இந்தச் சந்திப்பு முடிந்ததும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பிரதமருடன் நடந்த பேச்சு வார்த்தை குறித்து விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்தே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
மேலும் அந்தப் போட்டியின்போது தமிழகத்தில் அதிமுக 3 முறையாக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். திமுகவிற்கு சாதகமானவர்கள் கருத்துக் கணிப்பு கூறியதாகவும் அதில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் எனக் கருத்துக் கணிப்பு வெளியானதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.