இதனைத்தொடர்ந்து பிளாஸ்மா தொடர்பான ஆய்வு பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றிடம் தமிழக அரசு அனுமதி பெற்று உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் 26 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்பட்டு இதுவரை 24 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியானது 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புதன்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைக்க உள்ளார். இங்கு அமைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்மா வங்கியானது டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் முதன்மையான பிளாஸ்மா வங்கியாக அமையும். அதாவது இந்தியாவிலேயே இரண்டாவது பிளாஸ்மா வங்கி தமிழகத்தின் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனோ தொற்று நோயிலிருந்து குணமடைந்து நோயாளிகளிடமிருந்து ரத்தக் கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் ( Apheresis method ) 500 மி.லி. பிளாஸ்மா பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.