தன்னம்பிக்கை, தெளிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
தனியார் நிறுவனங்களிலும், பள்ளி-கல்லூரி போன்ற இடங்களிலும்… ஏன் பல வீடுகளிலும் கூட தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி என்றுதான் சொல்லித்தர முயல்கிறார்கள். தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற போதனையும் வழங்கப்படுகிறது. ஆனால், தெளிவில்லா தன்னபிக்கை எவ்வளவு பெரிய அபாயம் என்பதை பலரும் அறிவதில்லை! சத்குருவின் இந்த கட்டுரை இதுகுறித்த ஒரு பார்வையை வழங்குகிறது.
எனக்கு கண்பார்வை சற்றே மங்கலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்னால் சரியாகப் பார்க்கமுடியாது. ஆனால் ஒரு கூட்டத்தை நான் கடந்து செல்லவேண்டும். ‘என்னால் நிச்சயம் முடியும்’ என்ற தன்னம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கிறது. அதன் துணையோடு, அந்த கூட்டத்திற்குள் நான் நடந்து சென்றால், என்னவாகும்? பலர் தங்கள் வாழ்வை இப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு சரியான பார்வை இல்லை, ஆனால் அது ஒரு பிரச்சினை இல்லை… அவர்கள் தான் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்களே! இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை சுற்றி இருப்பவருக்கும் கூட ஆபத்து தான்.
என் பார்வை தெளிவாக இருக்குமானால், எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், யாரையும் இடித்துவிடாமல் என்னால் கடந்து போக முடியும். என் பார்வை மங்கலாக இருந்தால், ‘எனது பார்வை சரியில்லை’ என்ற பணிவேனும் என்னிடம் இருந்தால், வேறொருவரின் துணை ஏற்று, மெதுவாக மென்மையாக பயணிப்பேன். தெளிவான பார்வை இருப்பவரைப் போன்று என்னால் வேகமாக செல்ல முடியாமல் போகலாம். ஆனால் குறைந்தபட்சமாக மென்மையாகவேனும் நான் நடப்பேன். தெளிவான பார்வை கிடையாது. ஆனால் தன்னம்பிக்கை மட்டும் இருக்கிறது என்றால், நான் ஒரு நடமாடும் ஆபத்து தான். இதுதான் இன்று எல்லா இடத்திலும் நடக்கிறது. ஏனெனில் தன்னம்பிக்கையோடு வாழுமாறு நாம்தான் மக்களுக்கு போதனை செய்து கொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை என்பது தெளிவான பார்வைக்கு ஒரு விதத்தில் மாற்று என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. உதாரணத்திற்கு, உங்கள் வாழ்வில் பெரும் முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்கள் வரும்போது, அது சொந்த வாழ்க்கையாக இருந்தாலும், தொழில் விஷயமாக இருந்தாலும், ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிப் பார்த்து, ‘தலை விழுந்தால் இப்படி செய்வோம், பூ விழுந்தால் அப்படி செய்வோம்’ என்று முடிவு செய்பவர் நீங்கள் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு வாய்ப்புகளில் ஏதோ ஒன்று எப்படியும் நடக்கும். எனவே உங்கள் தேர்வு நிச்சயம் ஐம்பது சதவிகிதம் சரியாக இருக்கும்!
தினமும் காலை நீங்கள் எழும்போது, உங்கள் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து, உங்கள் உள்ளங்கைகளை மேல்முகமாக விரித்து வைத்து, கண் மூடி, ‘எதெல்லாம் நீங்கள் இல்லை’ என்பதை மனதில் தெளிவாகப் பாருங்கள். இதுவரை நீங்கள் சேகரித்துள்ள – உங்கள் வீடு, குடும்பம், உறவுகள், பட்டங்கள், உடல், துணி அனைத்தையும் நிறைவுடன் பாருங்கள். இது எல்லாம் உங்களுக்குக் கிடைத்ததற்கு நன்றியுடன் இருங்கள்.