சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வரும் ஜனவரி 24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் விடுதலை ஆகிறார். இந்தத் தகவலை கர்நாடக சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் விடுதலையாகும் சசிகலா நேராக சென்னைக்கு வராமல் தமிழ்நாட்டின் எல்லையான ஒசூர் அடுத்த சூளகிரி பகுதியில் தங்குகிறார் என்றும் அவருக்கு அமமுக கட்சியினர் அமோக வரவேற்பு அளிக்க காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சென்னைக்கு வராமல் சசிகலா ஒசூரில் தங்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கர்நாடக சிறைத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி சசிகலாவின் விடுதலை நேரத்தை இரவு 9 மணிக்கு மேல் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அவர் விடுதலையாகும்போது பத்திரிக்கை மற்றும் கட்சி உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் எழலாம் எனக் கருதி, சிறைத்துறை நிர்வாகம் இந்த முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு நேரத்தில் விடுதலையாகும் சசிகலாவிற்கு ஒசூரின் ஜுஜுவாடி பகுதியில் அமமுக கட்சியினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி முடிவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் அவர் ஒசூர் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் அல்லது சூளகிரி பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த நாள் காலை (28 ஆம் தேதி) அவர் கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சென்னைக்கு வருகிறார் என்றும் வழிநெடுகிலும் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அமமுக கட்சி சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.