திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் டிரைவர் இல்லாமல் நின்றிருந்த அரசு பேருந்தை சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. இதனால் அந்தப் பேருந்தின் டிரைவர் மற்றும் கன்ட்ரக்டர் இருவரும் பதறிப்போய் பஸ்ஸை துரத்திப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ்ஸை இயக்கிய வாலிபர் கஞ்சா அடித்து விட்டு போதையில் இதைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அப்படி கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட பேருந்தை அதன் டிரைவர் சரவணக்குமார் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு, களைப்பில் அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்று இருக்கிறார். உடன் இருந்த கன்ட்ரக்டர் நேரக்கண் காணிப்பாளர் அறைக்கு சென்றிருந்த நிலையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த அஜித்குமார்(32) என்ற வாலிபர் பேருந்தில் ஏறி டிரைவர் இல்லாததைப் பார்த்து திடீரென டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கி இருக்கிறார்.
இதை டீக்கடையில் இருந்து பார்த்த சரவணக்குமார் கத்திக் கொண்டே பஸ்ஸை துரத்திப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்குமார் கஞ்சா அடித்துவிட்டு போதையில் இப்படி செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். ஒருவேளை டிரைவர் அந்த பஸ்ஸை துரத்திப் பிடிக்கா விட்டால் சிறிது நேரத்தில் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அஜித் குமாரைத் தற்போது போக்குவரத்து போலீசார் கைது செய்துள்ளனர்.