அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது நிர்வாகச் சபையிலும் அவர் அமைத்த கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு குழுவிலும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய-அமெரிக்கர் என 21 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இயக்குநர், தலைமை என அந்நாட்டின் உயர் பதவிகளுக்கு 2 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பைடனின் குழுவில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பைடனின் அமைச்சரவையிலும் 2 இந்திய-அமெரிக்கர்கள் நியமிக்கப்படலாம் என்ற தகவல் கடந்த சில தினங்களாகப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு பைடனின் மனைவியான ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாலா அடிகா என்பவரை தற்போது பைடன் நியமனம் செய்து இருக்கிறார். இதனால் மேலும் ஒரு உயர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தேந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இதற்கு முன்னதாக துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸ் மட்டும்தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால் லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஒரு வரலாற்றுப் பேராசிரியர் ஒருவேளை அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஜோ பைடனின் பூர்வீகம் கூட இந்தியாவாக இருக்கலாம் என்ற தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார். இதனால் அமெரிக்காவில் இந்தியர்களின் மதிப்புக் கூடிக்கொண்டே போகிறது.