வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் எனும் விவசாயி தன்னுடைய சொத்தை தன் இளைய மகனுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து விட்டார். இப்படி ஒட்டுமொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்து விட்டு தன் மகனையே எதிர்ப்பார்த்து இருந்த நேரத்தில் மகனும் அவரை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதனால் விரக்தி அடைந்த ஜானகிராமன் மூத்தக் குடிமக்கள் சட்டத்தின்படி தன்னுடைய சொத்தை மீண்டும் மகனிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் ஒரு நிலத்தை மற்றவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த பின்பு அந்த நிலத்தின் மீது மீண்டும் உரிமை கொண்டாட முடியாது எனப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலூர் அடுத்த மோட்டூர் எனும் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன்- பத்மா தம்பதி தனது இளைய மகனுக்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்து வைத்தப் பின்பு மீண்டும் அதை பெற்றுக் கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்த ஜானகிராமன் தன்னுடைய மகன் தன்னை கவனிப்பதில்லை என்றும் இதை உணராமல் நிலத்தை எழுதி வைத்துவிட்டேன் மீண்டும் அதை பெற்றுத் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தார். இந்த விவகாரத்தை விசாரித்த கலெக்டர் இத்தம்பதியை கவனிக்க யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மூத்தக் குடிமக்கள் சட்டத்தின்படி மீண்டும் நிலத்தை ஜானகிராமனுக்கு பெற்றுத் தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெற்றோரை கண்டுகொள்ளாத பல பிள்ளைகளுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.