சொத்துக்குவிப்பு புகாரில் பீலா ராஜேஷ் கூறுவது என்ன…?
கொரோனா தொற்று தமிழகத்தில் பரவ ஆரம்பித்த தொடக்க காலகட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளாரக இருந்த பீலா ராஜேஷை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். தினசரி அவரது பேட்டியில் கொரோனா தொற்று குறித்து என்ன அறிவிக்கப்போகிறார் என தமிழகமே காத்துக்கொண்டிருந்தது. திடீரென சுகாதாரத்துறையிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ், வணிகவரித்துறை செயலாளாராக பணி அமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில்தான், பீலாவுக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சமூக ஆர்வலர் செந்தில்குமார் என்பவர் மத்திய பணியாளர் மற்றும் பொதுகுறை தீர்வு அமைச்சத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பீலா ராஜேஷ் தனது வீடுகளின் மதிப்பை குறைத்து காட்டியதாக குற்றம் சாட்டியிருந்தார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி, அதன் மதிப்பீட்டை குறைத்து காண்பித்துள்ளார் பீலா ராஜேஷ் என குற்றம்சாட்டியுள்ளார் செந்தில்குமார். பீலா ராஜேசுக்கு ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய் வருமானம் எதன் அடிப்படையில் வருகிறது என்பதற்கான முறையான ஆதாரங்கள் இல்லை என புயலைக்கிளப்பியுள்ளார் செந்தில்குமார்.
மத்தியரசின் உத்தரவு குறித்து விசாரிக்கப்படுமா என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இது குறித்து தமிழக அரசிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை, மூத்த அதிகாரி கூறியுள்ளார்.தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுக்கள் குறித்து விளக்கம் பெற முயற்சித்தபோது, பீலா ராஜேஷ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.ஏற்கனவே வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த பீலா ராஜேஷ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கணவரும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என்பதை புகார்தாரர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.