சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம் – இனி பணியிடங்களில் காய்ச்சல் முகாம்…
ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பணியிடங்கள் மற்றும் இரவு நேர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக உள்ள மாவட்டம் சென்னை. இதுவரை 1.78 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,351 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 1.61 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 13,280 பேர் சிகிச்சையில் உள்ளனர்
சென்னையில், குறைந்து வந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் மருத்துவ முகாம்களை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. காய்ச்சல் முகாம்கள் மூலம் தெருத்தெருவாக சோதனை நடத்துவதோடு, குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் தினமும் சராசரியாக 500 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த மே 8-ஆம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரையில் சென்னையில் மருத்துவ முகாம்களில் 29.13 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட 1.63 லட்சம் மாதிரிகளில் இருந்து 26,161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகும் விகிதம் 16% ஆகும்.தேனாம்பேட்டை மற்றும் திரு.வி.க நகரில் அதிகமான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், திரு.வி.க நகரில் நடத்தப்பட்ட முகாம்களில் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல், அதிகபட்சமாக அம்பத்தூரில் மருத்துவ முகாம் மூலம் 3,040 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனையில் 1,108 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 37% விகிதமாக உள்ளது.
குறைந்தபட்சமாக, திருவொற்றியூரில் 1,1400 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 760 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் முகாம்களில் கலந்து கொண்ட நிலையில், அது தற்போது 19 ஆயிரமாக குறைந்து உள்ளது. அடுத்ததாக பணியிடங்களில் நேரடியாக சென்று மாலை 3-5 மணி வரை மருத்துவ முகாம் நடத்தவும், தொடர்ந்து மாலை 5-8 மணி வரை என இரவு நேரங்களில் மருத்துவ முகாம்களையும் சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது.காய்ச்சல் கண்டறியும் முகாம் மேலும் சில மாதங்கள் தொடரும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.