சென்னையில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‘சென்னையில் 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இந்த ஆண்டு 60 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக கடந்த 6 நாட்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 1.05 கோடி மக்களுக்கு, 300 உணவு தயாரிக்கும் கூடங்களில் உணவு தயாரித்து தரமான உணவை வழங்கி இருக்கின்றோம்.
நிவர் மற்றும் புரெவி புயல்களால் சென்னையில் பாதிப்பு இருந்தாலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், கடந்த ஆண்டை விட பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்தது. அதனால் மழைநீர் தேங்கி, மிகவும் சவாலாக கருதப்படும் 23 இடங்களை தேர்ந்தெடுத்து, அந்தபகுதிகளுக்கு இனி எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் நிரந்திர தீர்வு காண மாநகராட்சி இன்ஜினீயர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது.
இன்னும் சில நாட்களில் சென்னையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்ட உள்ளது. மேலும் சென்னையில் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கும், 2ம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 3ம் கட்டமாக முதியவர்களுக்கும் வழங்கப்படும்’ என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.