தகவல்கள்

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு…

1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இத்திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மனு மீதான விசாரணையில், நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

இந்தத் திட்டத்தில் இருக்கும் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என எதிர்மனுதாரர்கள் வாதிட்டனர்.சென்னை -சேலம் திட்டத்திற்கான இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.