சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கா?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வெளியான தகவலை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மறுத்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கைத் தளர்த்திவிட்டு கொரோனா பரவலைத் தடுக்க அரசு முயற்சிப்பதால்தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது என்று கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி ஊரடங்கைக் கொண்டுவந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்… இல்லை என்றால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது போல லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கைக் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து கொரோனா தடுப்பு பணிகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வந்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள ஒவ்வொரு தெருவையும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும்” என்றார்.