கொரோனா பரவுதலை தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் பல்வேறு நாட்டினர் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் நடந்த ஆராய்ச்சியி முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை ஆராய்ச்சி மையம்
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட SGRF என்ற தனியார் மரபணு ஆய்வுக்கூடத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் ஈடுப்பட்டனர். அவர்கள் கொரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள மற்ற வைரஸ்களைவிட புதிய நாவல் கொரோனா வைரஸால் ஏன் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணத்தைத் தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்களது கருத்து இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றாலும் அதே போல கருத்தை அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஒன்றும் கூறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஆராய்ச்சிகள்
கொரோனா நாவல் (SARS-CoV-2) வைரஸ் பாதிப்பை அளவிட 400 வெவ்வேறு இனங்களைச் சார்ந்த 3 லட்சம் மக்களிடம் இருந்து அவர்களது DNA களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கிட்டத்தட்ட 1 சதவீதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. MedGenome Inc and SciGenom (SGRF) யின் சென்னை தலைவராகவுள்ள சேகர் சேஷகிரி தலைமையில் கொரோனா வைரஸ் புரதம் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் enzyme 2 எனப்படும் கொரோனாவின் ACE2 புரதம் மற்ற கொரோனா வைரஸ்களைவிட வேறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாற்றம்தான் புதிய கொரோனா வைரஸ் கிருமியால் அதிகம்பேர் பாதிக்கப்படுவதற்கு காரணம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆய்வு குழுவின் கருத்து
இந்த குழுவின் ஆய்வு முடிவுகள் Biorxiv.org என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாக கொரோனா வைரஸ் கிருமிகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு சளி, இருமல், நுரையீரல் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இவர்களில் குறைந்தது 10 விழுக்காடு நபர்களுக்கு சிகிச்சை கட்டாயம் தேவைப்படுகிறது. இதில் 5 விழுக்காட்டினருக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படுகிறது. இத்தருணத்தில் ஏன் கொரோனா வைரஸால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும்போது பாதிப்பின் அளவை குறைக்க உதவும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாவல் கொரோனா அதிகம் பரவ காரணம்
அடிப்படையில் கொரோனா SARS-CoV-2 தனது மேற்பரப்பில் உள்ள ACE2 புரதத்தின் மூலமாக மனிதச் செல்லுக்குள் புகுந்துவிடுகிறது. ஒரு கதவு போல கொரோனா வைரஸின் புரதம் செயல்படுகிறது. ACE2 புரதம் என்பது ஒரு நொதி. இது ரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. 2003 இல் கண்டுபிடிக்கப்பட்ட சார்ஸ் வைரஸ் (SARS-CoV) வுடன் ஒப்பிடும்போது புதிய கொரோனா வைரஸிடன் உள்ள ACE2 புரதம் மனித செல்களுடனான பிணைப்பில் அதிக ஏற்புத்தன்மையுடன் செயல்படுகிறது. அதாவது பழைய சார்ஸ் வைரஸின் புரதம் மனித செல்களுடன் நடத்திய பிணைப்பை விட 10 முதல் 15 விழுக்காடு அதிக பிணைப்புடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிடன் உள்ள இந்த ACE2 புரதம் ஏற்பி அதிகப் பிணைப்புடன் செயலாற்றுவதால் அதிக மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றன என ஆய்வுக்குழுவின் தலைவர் சேகர் சேஷகிரி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவானது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவும் அதே நேரத்தில் நோய் தடுப்புக்கான ஒரு வழிமுறையாகவும் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆயுதம்
இந்த ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவின் MedGenome இன் துணைத் தலைவரான Eric Stawiski, கொரோனா வைரஸின் புரதம் அதிகப் பிணைப்பை பெற்றுள்ளதால் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உறுதிப் படுத்தியுள்ளார். மேலும், அடுத்தக் கட்ட ஆய்வில் ACE2 புரதத்தை ஒன்றிணைத்து கொரேனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார். ACE2 புரதம் மனித செல்லுக்குள் ஒரு ஆன்டி பாடியாக செயல்படுவதற்கான வாயப்பு இருக்கிறது. ACE2 புரதத்தை கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆயுதமாக மாற்றவும் முடியும் எனவும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் சேகர் சேஷகிரி தெரிவித்துள்ளார்.