வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் பா.ம.க.வினர் நேற்று முதல் போராட்டம் நடத்தியது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்பட பா.ம.க.வினர் 3 ஆயிரம் பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் 4 நாட்கள் போராட்டம் நடத்தப்படுகிறது.
முதல்நாள் போராட்டத்தின்போது பஸ்-ரெயில்களை மறித்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் மீது கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் பஸ் மறியலால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன.
சென்னை மன்றோ சிலை அருகே நடந்த போராட்டத்திற்கு வந்தவர்களை தடுத்து நிறுத்திய காரணத்தாலேயே மறியல் போராட்டங்கள் நடந்தன. இருப்பினும் தடையை மீறி சென்னையில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா காலத்தில் அரசின் தடையை மீறி கூட்டமாக கூடியது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் அருகே தண்டவாளத்தை மறித்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கல்வீசி தாக்கியதுடன் தண்டவாளத்தின் குறுக்கே சாலை தடுப்புகளை போட்டும் தடைகளை ஏற்படுத்தினர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் 350 பா.ம.க.வினர் மீது தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ரெயில்வே தண்டவாள பகுதியில் அத்துமீறி நுழைந்தது, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம், பீர்க்கன்கரணை போலீஸ் நிலையங்களிலும் வழக்கு போடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் 150-க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீர்க்கன்கரணை போலீஸ் நிலையத்தில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 78 இடங்களில் மறியல் மற்றும் போராட்டங்கள் நடந்தன. இது தொடர்பாக அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.