சென்னையில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்கள் – விரைவில் ஆலோசனை நடத்த உள்ள ரஜினிகாந்த்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை குறிப்பிட்டு சென்னையில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பின்னர், அரசியல் கட்சியை தொடங்குவது உறுதி என்று கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக அவர் கூறினார். இதன்படி, அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் பயணம் குறித்து விளக்கம் அளித்தார். முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என தெளிவாக கூறிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மூன்று திட்டங்கள் வைத்திருப்பதை பற்றியும் விளக்கினார். அதில் ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என ரஜினிகாந்த் பேசினார். அதிமுக, திமுக என்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை தேர்தலில் எதிர்கொள்ள உள்ளதாக குறிப்பிட்ட ரஜினிகாந்த், 2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அற்புதத்தை நிகழ்த்த காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். மக்களிடையே ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டால்தான் தமது அரசியல் பிரவேசம் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான தேர்தலை எதிர்கொள்ளவும், கூட்டணி அமைக்கவும் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரஜினிகாந்தின் ரசிகர்கள், அரசியல் பிரவேசத்துக்கான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், மாற்றத்தை நோக்கி தமிழகம் என்றும், ஆன்மீக அரசியல் இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு பதவியில் 65 சதவீதம் முன்னுரிமை உள்ளிட்ட ரஜினியின் திட்டங்களையும் ரசிகர்கள் போஸ்டரில் இடம்பெற செய்துள்ளனர். இது ஒருபுறமிருக்க ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.